மக்கள் ஜனாதிபதியானார் கலாம்
25.7.2002 அன்று குடியரசுத் தலைவராக டாக்டர் கலாம் பதவி ஏற்றார். இந்தியாவில் பிறந்த எல்லோருக்குமே சம வாய்ப்பு என்பது தான் அடிப்படையாக குடியரசின் தத்துவம். இதனைக் கலாம் வாழ்ந்தே காட்டினார்.
குடியரசுத் தலைவராக கலாம் பதவி ஏற்றதும் அவரது உடையையும் தலை முடியையும் மாற்ற சிலர் வேண்டுகோள் விடுத்தனர், ஆனால் கலாமோ புன்னைகையுடன் அதனை மறுத்து விட்டார்.
பொதுவாகக் குடியரசுத் தலைவர் மாளிகை எப்பொழுதும் உற்றார், உறவினர், நண்பர்கள் எனத் திருவிழாக் கூட்டமாக நிறைந்து காணப்படும்.
ஆனால் கலாம் அந்த நிலையை அப்படியே மாற்றிவிட்டார். ஏனெனில் கலாம் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. அதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து உற்றார் - உறவினர் என யாரையும் உதவிக்காக அழைத்து, தன்னுடன் வைத்துக் கொள்ளாதவர்.
அது மட்டும் அல்ல, கலாமின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது அன்பு அண்ணன் முத்துமீரான் மற்றும் இதர உறவினர்கள் யாரையுமே குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்காதவர் கலாம் என்பது இன்னொரு ஆச்சர்யமான விஷயம். எனினும் அண்ணன் முத்து மீரானின் மீது கலாமிற்கு மரியாதை இல்லாமல் இல்லை, இன்னும் சொல்லப் போனால் தான் குடியரசுத் தலைவர் பதவியில் அமரும் சமயத்தில் இராமேஸ்வரம் சென்று அண்ணன் முத்துமீரானின் ஆசியைப் பெற்ற பிறகே கலாம் அந்தப் பதவியில் அமர்ந்தார்.
அது மட்டுமா, இராமேஸ்வரத்தில் மறக்காமல் தனக்கு சிறு வயதில் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் சிலரையும் சென்று பார்த்து அவர்களிடம் இருந்தும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற கலாம் எப்பொழுதுமே அதிகாலையில் எழுந்து விடும் பழக்கத்தைக் கொண்டு இருந்தார். அத்துடன் காலையில் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி நிம்மதியாக நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். குடியரசு மாளிகையில் அதிகாரிகள், பாதுக்காப்பு இன்றி அவ்வாறு நடக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அப்படி இருந்தும் கூட அனாவசியமான பாதுகாப்பை கலாம் நிராகரித்தார்.
Comments
Post a Comment