கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்
அப்துல் கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம் கூட கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தார் கலாம். அன்றைய காலத்தில், ராமேஸ்வரம் திருட்டுப் பயம் இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அப்பா இல்லை. அம்மா தொழுகையில் இருந்தார்.
அச்சமயத்தில், வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார். கலாமிடம் அவர் தந்தை ஜைனுல்லாபுதீனைப் பற்றி விசாரித்தார். வீட்டுக்குள் கலாமின் அம்மா தொழுகையிலிருந்து பாதியில் எழ வழியில்லாத அளவுக்கு இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார். வந்தவரின் கையில் ஒரு தாம்பூலத் தட்டு இருந்தது.
‘சரி, இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக்கொள்' என்றார் வந்தவர். கலாம் ஒரு நிமிடம் யோசித்தார். அம்மாவிடம் கேட்கலாம் என்றால் அவர் தொழுகையில் இருக்கிறார். வாங்காமல் போனால் வந்தவரை அவமானப்படுத்தும் படியாக ஆகி விடும். வேறுவழியில்லாமல் கலாம் அந்தப் பரிசுப் பொருளை வாங்கிக் கட்டிலில் வைத்தார். வந்தவர், வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் திரும்பிச் சென்றார்.
அந்தத் தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேஷ்டி, அங்க வஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின் தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக் கொண்டார்.
ஜைனுல்லாபுதீன் வீட்டுக்குள் வந்தபோது கலாம் நடந்ததைச் சொன்னார். அவ்வளவு தான், கலாமின் தந்தை கோபத்தின் உச்சிக்கே போனார். தாறு மாறாகக் கலாமைத் திட்ட ஆரம்பித்தார். முதுகில் ஓர் அடியும் விழுந்தது. சிறுவனாக இருந்த கலாம் அழ ஆரம்பித்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, கோபம் தணிந்த பின்பு கலாமை அருகில் அழைத்தார் ஜைனுல்லாபுதீன். அன்புடன் கலாமிடம் மெல்ல ‘இதுபோன்ற பரிசுப்பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகி விடக் கூடாது. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும்' என்று அறிவுரை செய்தார்.
மேற்கண்ட அறிவுரையை கலாம் தனது வாழ் நாளில் எப்போதுமே மறக்க வில்லை. ஏன் அவர் குடியரசுத் தலைவராக இருந்த சமயத்திலும், அதன் பிறகும் கூட கறைபடியாத கரங்களைக் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில், குடியரசுத் தலைவர் பதவி வகித்த கலாமை அவருடைய இறுதி அலுவலக நாளன்று பல வி.ஐ.பி.க்கள் பரிசுப் பொருள்களோடு வந்து சந்தித்தனர். ‘என் தந்தை ஜைனுல்லாபுதீன் எனக்கு கொடுத்த அறிவுரை, ஒருபோதும் பரிசுப் பொருளை வாங்காதே. அவர் வழியில் செல்பவன் நான். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்' என்று புன்னகையுடன் பரிசுப் பொருள்களை வாங்க மறுத்துவிட்டார் கலாம்.
இதனால் தான் அவர் இன்றும் கூட நினைவு கொள்ளப்படுகிறார். என்றும் நினைவு கொள்ளப்படுவார்.
Comments
Post a Comment