ஆறு வயதில் கலாமை உருக்கிய காட்சி
கலாமிற்கு ஆறு வயது இருக்கும். அவரது தந்தை இரவு பகலாக மிகவும் கஷ்டப்பட்டு படகு ஒன்றைத் தயார் செய்தார். கலாம் அதனை மிகுந்த ஆர்வமுடன் பார்த்து வந்தார். சில நாட்களிலேயே அந்தப் படகு முழுமை பெற்று சவாரிக்குத் தயார் ஆனது. அதன் மூலம் கணிசமான அளவு வாடகையும் கலாமின் குடும்பத்திற்குக் கிடைத்து வந்தது.
இந்நிலையில், ஒரு நாள் திடீர் என்று வீசிய புயல் காற்று கரையில் இருந்த பல படகுகளை அடித்து இழுத்துச் சென்றது. அதில் கலாமின் தந்தை தயாரித்த படகும் அடங்கும். கடலின் பலத்த அலைகள் அந்தப் படகை பாறைகளின் மீது மோதியது. இதனால் அந்தப் படகு சின்னாபின்னமாக உடைந்து போனது.
தனது தந்தை இரவும் பகலுமாக மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கிய படகு சில நொடிகளிலேயே இயற்கையின் வலுவான கரங்களால் உடைக்கப்பட்டதை பார்த்த கலாமின் மனதும் கூட அந்தப் படகைப் போல உடைந்து போனது. எனினும், அதே சமயத்தில் இயற்கையின் அளவற்ற சக்தியினைக் கண்டு அக்கணமே கலாம் வியக்க ஆரம்பித்தார்.
மேலும் காலம் அந்த சிறு வயதில் கேட்ட பல கேள்விகள் அவர் தந்தையை ஆச்சர்யப் பட வைத்தது. ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பார்களே! அதே போலத் தான் கலாமின் அறிவித் திறன் அந்தச் சிறுவயதில் இருந்தே பளிச்சிட ஆரம்பித்தது.
பிற்பாடு தக்க சமயத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்டார் கலாம். உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். அவருக்குப் படிப்பிலும் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையாக நடந்து கொண்டார். அதனால் சிறுவயதிலேயே அனைத்துப் பெரியவர்களின் ஆசிர்வாதமும் கலாமிற்குக் கிடைத்தது. அந்த ஆசிர்வாதமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
Comments
Post a Comment