கலாமிற்கு வரிசையாக வந்த துக்கச் செய்திகள்
எஸ். எல். வி ராக்கெட்டின் செயல் திறனைக் கணக்கிடுவதற்காக ரோகிணி செயற்கைக் கோளை விண்வெளியில் ஏவ திட்டமிட்டனர் அறிவியல் துறை அறிஞர்கள். அதற்கு அரசாங்கத்தின் அனுமதியும் பெறப்பட்டது.
முதற்கட்ட ஆராய்ச்சியை கலாம் மேற்கொண்டு இருந்தார். அவரது குழுவினரும் முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் கலாமின் சகோதரி மரணம் அடைந்தார். இவர் தான் கலாம் படிப்பதற்காக தனது நகைகள் அனைத்தையும் அடகு வைத்துக் கொடுத்தவர். அத்துடன் கலாமின் மீது அதிக அன்பும் கொண்டவர். அவர் மட்டும் அன்று நகைகளை அடகு வைத்துக் கொடுக்கவில்லை என்றால் கலாமால் ஒருவேளை படிக்க முடியாமல் கூட போயிருக்கலாம்.
இப்படி இருக்கத் தனது சகோதரி மரணம் அடைந்த விஷயத்தை கேட்ட கலாம் துடித்துப் போனார். பொறுப்புகளை சில காலம் ஒய். எஸ். ராஜன் என்ற விஞ்ஞானியிடம் ஒப்படைத்த கலாம். உடனே தனது ஊருக்குப் புறப்பட்டார். கலாமின் வருத்தத்தை கண்ட அவரது தந்தை, ’ கலாம்! எல்லாமே இறைவனின் விருப்பப்படி தான் நடந்து வருகிறது. நாம் அனைவரும் இறைவனின் கைப் பாவைகள். இதில் நீ கவலைப்பட ஒன்றும் இல்லை’ என்று ஆறுதல் கூறித் தேற்றினார். இறுதிச் சடங்குகள் அனைத்தும் முறைப்படி நடந்தேறியது.
எனினும், சில காலங்கள் வரையில் கலாம் மனதில் இருந்த வேதனை அகல வில்லை. அந்த வேதனையுடனேயே ‘தும்பா’ திரும்பினார் கலாம். பல கடமைகள் அவருக்காக அங்கு காத்துக் கொண்டு இருந்தது. வேதனையில் இருந்த கலாமை இஸ்ரோவின் தலைவரான பேராசிரியர் தவான் ஆறுதல் மொழி கூறித் தேற்றினார். இதனால் மனம் தேறிய கலாம் மீண்டும் தமது ராக்கெட் பணியில் மும்முரம் ஆனார். உடனுக்குடன் நான்கு ராக்கெட் மோட்டார்களை தயாரித்த கலாம் அது சம்மந்தமான பல பணிகளை இடைவெளி இல்லாமல் செய்து வந்தார். இந்தக் கடினமான பணிகளை முடிக்க கலாமிற்கு சக விஞ்ஞானியான ஒய். எஸ். ராஜன் உறுதுணையாக நின்றார்.
இப்படியாக ராக்கெட்டை ஏவத் தேவையான அனைத்து வேலைகளும் மும்முரமாக போய்க் கொண்டு இருந்த சமயம். கலாமிற்கு மற்றும் ஒரு பேரிடிச் செய்தி வந்தது. அது தான் அவரது தந்தையின் மரணம்.
அன்பையும், பண்பையும் ஊட்டி வளர்த்தத் தனது தந்தை போய் விட்டார் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் கலாம் கலங்கித் தவித்தார். எனினும் தனது மனதை தேற்றிக் கொண்டு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு பிற்பாடு தாயிடமும், உற்றார் உறவினர்களிடமும் பிரியா விடை பெற்று தும்பா ராக்கெட் நிலையத்திற்குச் சென்றார். தனது தந்தை சொல்லிய வார்த்தைகளை மனதினில் கொண்டு ‘எல்லாமே இறைவன் செயல், நமது கையில் என்ன இருக்கிறது’ என்பதை உணர்ந்தவராய் தனது பொறுப்புக்களை அக்கறையுடன் கவனித்து வந்தார். அத்துடன் துக்கத்தை மறக்கத் தனது வேலையில் ஈடுபட்ட கலாம் எஸ்.எல்.வி ராக்கெட்டை ஒரு வழியாக வடிவமைப்புக்கு கொண்டு வந்தார். அதனை உத்தேசித்துத் தான் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 1978 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் செயற்கைக் கோளை கூடிய விரைவில் வானில் பறக்க விடும் என்பதை ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து செயற்கைக் கோளை பறக்கவிடத் திட்டம் வகுக்கப் பட்டு இருந்தது. ஆனால் சில அந்நிய சக்திகளின் காரணமாக கடைசி நேரத்தில் சில தொழிநுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு ராக்கெட் பறக்க இயலாமல் போனது. இதனைக் கேள்விப்பட்ட கலாம் உடனடியாக பிரான்ஸ் தேசத்திற்குச் சென்றார். அங்கு ராக்கெட் சம்மந்தமான தொழில் நுட்பக் கோளாறுகள் ஆராயப்பட்டு வந்தது.
இந்தச் சமயத்தில் தான் இன்னொரு பேர் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று கலாமிற்கு வந்தது. அது தான் அவரது தாயாரின் மரணம். இப்போது தான் தந்தை மற்றும் சகோதிரியின் மரணத்தில் இருந்து கலாம் மீண்டிருந்த நிலையில் இப்படி இன்னொரு ஒரு சோகம் வரும் என்பதை அவர் எதிர்பார்க்க வில்லை. என்ன செய்ய? எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பது இயற்கை தானே! கண்ணீரை மறைத்தபடி சொந்த ஊர் திரும்பிய கலாம் தாயாருக்கு கடைசியாக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து நல்லபடியாக இறுதி வழி அனுப்பி வைத்தார். மீண்டும் உறவினர்களிடம் விடை பெற்று கண்ணன் கீதையில் கூறியதை போலத் தனது கடமையை செய்யப் புறப்பட்டார் நமது சரித்திர நாயகன்.
இப்படியாக கலாம் அவர்களை துன்பங்களும், மரணச் செய்திகளும் இடையூறு செய்த வண்ணம் இருந்தன. எனினும் அவர் அதற்கு முக்கியத்துவம் தந்து நொந்து விடமால் பீலிக்ஸ் பறவை போல தனது சாதனை வானத்தில் பறந்தார், பறந்தார் இறுதி வரையில் பறந்து கொண்டே இருந்தார்.
எனினும், அடுத்தடுத்து ஏற்பட்ட மரணச் சம்பவங்கள் அனைத்தும் விஞ்ஞானியாக மட்டுமே இருந்த கலாமை ஒரு ஞானியாக மாற்றியது. கலாம் மிகுந்த பக்குவம் அடைந்தவர் ஆனார்.
‘கலாம்! உனது தாய், தந்தை மற்றும் சகோதரியின் மரணத்தை எண்ணி, எண்ணி ஏன் நீ வருந்துகிறாய்? அவர்கள் வந்த வேலை நல்லபடியாக முடிந்து விட்டது என்பதால் தான் நான் அவர்களை அழைத்துக் கொண்டேன். அதற்காக நீ வருந்த வேண்டிய அவசியம் இல்லை. உன் முன்னாள் இருக்கிற ஒப்பற்ற பணிகளில் நீ கவனம் செலுத்தத் தொடங்கி விடு. மேலும் நீ செய்யும் செயல்களைப் பார்த்து நான் பெருமைப் பட வேண்டும்’ என்று இறைவன் தன்னிடம் கூறுவதாக உணர்ந்தார் கலாம். அதனை இறை ஆணையாக ஏற்றுத் தனது வேலையையே காலப் போக்கில் தனது மனைவியாக ஆக்கிக் கொண்டார் அவர். அத்துடன் ராக்கெட்டை பறக்க விடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார் கலாம். தேனீ போல சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். எஸ். எல். வி ஒன்றே தமது முதல் நோக்கம் என்று அவருக்குப் பட்டது.
தனது ஆராய்ச்சியில் கலாம் சில தோல்விகளை சந்தித்தது உண்மை தான். அதிலும் குறிப்பாக எஸ். எல். வி. ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்த காரணத்தால் உலகப் பத்திரிக்கைகள் சில கேலிச் சித்திரங்களை வெளியிட்டு நையாண்டி கூட செய்தன. அதைப் பார்த்துக் கலாமை பிடிக்காத சிலர் கைகொட்டிச் சிரித்தனர். அனைத்தையும் தாங்கிக் கொண்டார் கலாம். கடுமையாக உழைத்தார், அந்த உழைப்பின் பலனாய் எஸ்.எல்.வி. ராக்கெட் 1980 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படத் தயார் ஆனது. நிச்சயம் இதுவும் தோல்வியில் தான் முடியும் என்று சில அந்நிய சக்திகள் நினைத்தன.
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய் ஆக்கி விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது எஸ். எல். வி. அத்துடன் வானில் தனது அடுத்தக் கட்டத்தையும் தாண்டிப் பறந்தது. விண்வெளியை அடைந்த இரண்டு நிமிடங்களில் 'ரோகிணி' பிரிந்து சென்று அதன் பாதையில் கச்சிதமாக நகரத் தொடங்கியது. உலக நாடுகள் அனைத்தும் தனது பார்வையை ஒன்று திரட்டி இந்தியா மீது கண் கொட்டாமல் வைத்தது. வெற்றி, வெற்றி இது இந்திய அறிவியல் துறைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று பத்திரிக்கைகள் போற்றிப் புகழ்ந்தன. முன்பு கலாமை இகழ்ந்த வாய்கள் அனைத்தும் அவரைப் போற்றிப் புகழ்ந்தன. உலகத்தின் போக்கை நினைத்துக் கலாம் மனதினில் சிரித்துக் கொண்டார். இப்போது புகழ், இகழ் என எதுவுமே அவரை பாதிக்கவில்லை. ஆம்! அந்த நிலையில் தான் கலாம் இருந்தார். ஒரு ஞானியாகவே.
பிற்பாடு மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் எஸ்.எல். வி. யின் வெற்றி குறித்து நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட கலாம், ’இது இருபது வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அது மட்டும் அல்ல வெற்றி வேண்டும் என்றால் எதிர் நீச்சல் போட வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டு போனால் வெற்றி ஒருபோதும் கிட்டாது. விடாமுயற்சியின் குழந்தை தான் வெற்றி’ என்று கம்பீரமாக உரை நிகழ்த்தினார்.
Comments
Post a Comment