ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்
அமெரிக்காவில் ஆறு மாதப் பயிற்சியினைப் பெற்றுக் கொண்டு இந்தியா வந்தார் கலாம். இந்தியா வந்த கையோடு 21.11.1963 இல் இந்தியாவின் முதல் ராக்கெட் தயார் ஆனது. அப்போதெல்லாம் பெரிய வசதி இல்லாத காரணத்தால் ராக்கெட் இன் உதிரி பாகங்கள் சைக்கிள்களில் கூட சில சமயங்களில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கேட்டு அண்டை நாடுகள் சிரித்து வந்தன. அத்துடன் வல்லரசு நாடுகள் சில 'இந்தியா ராக்கெட் ஐ வடிவமைக்கிறதா? அவர்களால் இது முடியுமா?' என்றெல்லாம் ஏளனமாக இந்தியாவை பார்த்து வந்தது. இந்த நிலையில் தான் கலாம் தனது முதல் ராக்கெட் ஐ விஞ்ஞானிகளின் குழுவுடன் சேர்ந்து விக்ரம் சாராபாய் வழிகாட்ட வெற்றிகரமாக உருவாக்கி முடித்தார்.
வெற்றிகரமாகத் தயாரான ராக்கெட்டுகளை லாரி மூலம் ராக்கெட் ஏவு தளத்திற்கு கலாமின் குழுவினர் கொண்டு சென்றனர். கிரேன் மூலம் ராக்கெட்டை லாரியில் இருந்து ஏவு தளத்தில் பொருத்துவதற்குத் தயாராக இருந்தனர். அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பக்கமாக ராக்கெட் சரியத் தொடங்கியது. அந்த வேளையில் கிரேனைச் சரி செய்வது என்பது இயலாத காரியம் மட்டும் அல்ல ஆபத்தான காரியமும் கூட. இன்னும் சொல்லப் போனால் அது யாருமே செய்ய இயலாத, செய்யத் துணியாத காரியம்.
ஆனால் ராக்கெட் சரிவதைக் கண்ட கலாமும் அவரது குழுவினரும் ஓடிச் சென்று தங்களது கையாலேயே ராக்கெட்டை தூக்கி ஏவு தளத்தில் பொருத்தினார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் ராக்கெட் தனது முதல் சோதனையிலேயே வானத்தை கிழித்தபடி பெரும் சத்தத்துடன் பாய்ந்து சென்றது. அது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல் மைல் கல்லாகக் கருதப்பட்டது. அத்துடன் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்தது. கலாம் மற்றும் அவரது குழுவிற்கு பெரும் பாராட்டுகளை இச்சம்பம் பெற்றுத் தந்தது.
Comments
Post a Comment