கலாமின் களங்கம் இல்லா நட்பு
ஒரு நாள் கலாம் படித்துக் கொண்டு இருந்த அப் பள்ளிக்கு புதிதாக ஆசிரியர் ஒருவர் வந்தார். அப்துல் கலாம் அவர்கள் எப்போதுமே அந்த வகுப்பில் தனது அன்புத் தோழனான உச்சிக் குடுமி ராமநாதனுடன் தான் உட்கார்ந்து இருப்பார். கலாம் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் அல்லவா அதனால் எப்போதும் ஒரு குல்லாவுடன் காணப்படுவார். ஆனால் அவரது நண்பர் உச்சிக்கு குடுமி ராமநாதன் பிராமண குலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கலாமும் அவரது உயிர் நண்பனான உச்சிக் குடுமி ராமநாதனும் அருகருகே அமர்ந்து இருப்பதைக் கண்ட ஆசிரியர் மிகவும் கோபம் கொண்டார். தீண்டாமை மிகுந்து இருந்த அந்தக் காலத்தில் 'உச்சிக் குடுமியும், குல்லாவும் ஒன்றாக அமர்வதா? கூடவே கூடாது’ என முடிவெடுத்து கடைசி பெஞ்சில் கலாமை உட்காரச் செய்தார். கலாமும் ஆசிரியர் சொல்படியே கடைசி பெஞ்சில் நண்பனைப் பிரிந்த மன வருத்தத்துடன் சென்று அமர்ந்து கொண்டார். அன்று முழுதும் அவர் மனம் வேதனை அடைந்து இருந்தது. மன வருத்தத்துடன் வீட்டிற்கு சென்ற கலாமிடம் நடந்த விஷயத்தை கேட்டறிந்தார் அவரது தந்தை.
அதே போல ராமநாதனும் தனது தந்தையிடம் அன்று வகுப்பில் நடந்தவற்றை விரிவாகக் கூறினார். ராமநாதனின் தந்தை லட்சுமண சாஸ்திரி விஷயத்தைக் கேட்டு அதீத கோபம் கொண்டார். உடனே அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரை வீட்டுக்கு அழைத்தார். ஆசிரியரும் லட்சுமண சாஸ்திரியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு விரைந்தார்.
அப்போது லட்சுமண சாஸ்திரி அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரிடம், ’சார்! பிஞ்சு உள்ளங்களில் சமய வேறுபாடுகளை உருவாக்கி விடாதீர்கள். அது பாவம். அந்தப் பாவம் உங்களைத் தான் சேரும். தயவு செய்து இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எனது மகன் கலாமுடன் கொண்ட நட்பு புனிதமானது. அதே போலத் தான் அந்தக் கலாமின் நட்பும். ஆக, இவ்விருவரின் நட்பும் சமயத்தை கடந்த நட்பு’ என்று கூறிக் கடுமையாகக் கண்டித்தார். ஆசிரியரும் லக்ஷ்மண சாஸ்திரி சொன்னதின் மெய்ப் பொருளை அறிந்து தான் செய்த தவறுக்காக மிகவும் வருந்தினார்.
பிறகு அந்த ஆசிரியர் லக்ஷ்மண சாஸ்திரியிடம், ’குருக்கள் சார், என்னை தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள். நான் இனி பிள்ளைகளிடம் சமய உணர்வைத் தூண்டும் படியாக ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன்’ என்று கூறிச் சென்றார். அடுத்த நாளே தனியே உட்கார வைத்திருந்த கலாமை மீண்டும் அவரது உயிர் நண்பனான ராமநாதனுடன் அமரச் செய்தார். கலாமிற்கு மிகுந்த சந்தோஷம். ஆக, இப்படியாக அந்தச் சிறு வயதில் இருந்தே கலாம் சாதி மத உணர்வின்றி அனைவரிடமும் அன்பு பாராட்டினார் என்பதை நாமும் அறியலாம். மற்றவர்களும் கலாமை அன்புடன் தான் பார்த்தனர்.
Comments
Post a Comment