பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்
கலாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். தனக்கு உரிய ஓய்வு நேரத்தில் நூலகத்திற்கு செல்வார். அங்கு இருக்கும் பல தரப்பட்ட நல்ல நூல்களை எல்லாம் புரட்டிப் பார்ப்பார். இதற்கெல்லாம் தூண்டுகோலாக இருந்தவர்கள் இருவர் அதில் ஒருவர் ஜலாலுதீன், இன்னொருவர் சம்சுதீன். இதில் சம்சுதீன் கலாமின் ஒன்று விட்ட சகோதரர். அவர் செய்தித் தாளின் ஏஜெண்ட்டாக இருந்து வந்தார். அதனால் கலாமுக்கு அனைத்து பத்திரிகைகளையும் அனுதினமும் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது எனலாம்.
இந்த நிலையில் தான் கலாம் ஐந்தாம் வகுப்பினை முடித்து இருந்தார். உள்ளூரில் உயர்நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால் இராமநாதபுரம் சென்று அங்கு உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
அந்த வயதில் கூட தனக்கு கிடைக்கும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதனை மிகுந்த ஆர்வத்துடனும், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யக் கூடியவர் நமது கலாம் அவர்கள்.
இந்நிலையில் பெற்றோரின் குடும்ப பாரத்தை குறைக்கும் பொருட்டும், தனக்கு ஒரு பொழுது போக்குத் தேவை என்று நினைத்த காரணத்தினாலும், பெற்றோர்களின் சம்மதத்துடன் சம்சுதீனிடம் பகுதி நேர வேலைக்கு அமர்ந்தார்.
அவரது வேலை யாதெனில், ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே ராமேஸ்வரம் இருப்புப் பாதையில், ஓடும் ரயிலில் இருந்து பத்திரிக்கைகளை கட்டு கட்டாக வீசுவார்கள். அந்தக் கட்டுகளைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு சம்சுதீனுக்கு ஒரு உதவியால் தேவைப் பட்டது. அதைத் தான் கலாம் செய்தார். அத்துடன் சுறு சுறுப்புடன் இருந்த கலாமிற்கு அந்த வேலை மிகவும் பிடித்துப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படியாக கலாமின் அந்தச் சின்னச் சின்ன சம்பாத்தியத்திற்கு சம்சுதீன் மிகவும் உதவினார். அதனை நினைத்து கலாம் தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கூட பெருமைப் படுகிறார். ஏனெனில் அவரது முதல் சம்பாத்தியம் அதில் இருந்து தான் தொடங்கியது.
Comments
Post a Comment